அதிகாரம் 25

அருளுடைமை

Compassion. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

குறள் 242

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

குறள் 244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை.

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

குறள் 245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

குறள் 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

குறள் 247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

குறள் 248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

குறள் 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

குறள் 250

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து.

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.